பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைப்பு: அரசின் நடவடிக்கைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு..!

இஸ்லாமாபாத் : சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் பாகிஸ்தான் அரசு டீசல் விலையை அதிரடியாக லிட்டருக்கு 40 ரூபாய் குறைத்துள்ளது.

பாகிஸ்தானில் விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் உயர்த்திய போர் கொடியால் ஏப்ரல் மாதத்தில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. உக்ரைன் – ரஷ்யா போர் போன்ற சர்வதேச போர் சூழல் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரித்தது இம்ரான் அரசு கவிழ்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது. அதன் பிறகு ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 3 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.

மார்ச் மாதத்தில் 120 டாலர் வரை அதிகரித்த கச்சா எண்ணெய் விலை தற்போது 97 டாலராக சரிந்தது. கச்சா எண்ணெய் விலை சரிவின் பயன் மக்களை சென்றடையும் வகையில் டீசல் லிட்டருக்கு 40 ரூபாய் 54 காசுகளும் பெட்ரோல் லிட்டருக்கு 18 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நேற்று முன்தினம் அறிவித்தார். விலை குறைப்பை உடனடியாக அமல்படுத்த பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஸ்மாயில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையத்தை கேட்டுக் கொண்டார். அதன்படி நேற்று முதல் விலை குறைப்பு அமல்படுத்தப்பட்டது. பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட முழுமையாக காலியாகி சர்வதேச நாணயத்திடம் கடன் வாங்க 1 மாதத்திற்கும் மேலாக முயற்சிகள் நடந்து வருகிறது. இருப்பினும் இதுவரை கடன் கிடைக்காத சூழலிலும் பாகிஸ்தான் அரசு துணிச்சலாக எரிபொருள் விலையை குறைத்து இருப்பது அந்நாட்டு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.