எஜமானர் இறந்தது தெரியாமல் சவக்கிடங்கு முன்பு 4 மாதமாக காத்திருக்கும் வளர்ப்பு நாய் – நெகிழ்ச்சி சம்பவம்.!!

திருவனந்தபுரம்: எஜமானர் இறந்தது தெரியாமல் சவக்கிடங்கு முன்பு 4 மாதமாக வளர்ப்பு நாய் காத்துக்கிடக்கிறது.

கேரளாவின் கண்ணூர் மாவட்ட மருத்துவமனை சவக்கிடங்கின் நுழைவு வாயிலில், தன் எஜமான் பூமியை விட்டு விடைபெற்றது தெரியாமல் ஏக்கத்துடன் காத்துக்கிடக்கிறது.

நாய்கள் நன்றியுள்ள பிராணி.. தனக்கு உணவளித்தவர்களை ஒரு போதும் தாக்காது. தன் மீது அன்பு காட்டுபவர்கள் மீது, அவர்கள் காட்டியதை விட பல மடங்கு அன்பு காட்டும். மனிதனை போல் ஏமாற்றாது. அதனால் தான் செல்லப்பிராணிகள் வளர்ப்பில் நாய்கள் தான் முதலிடத்தில் உள்ளன. தனது எஜமானுக்காக யாருடனும் சண்டைக்கும் போகும். அவரை காணாவிட்டால் சோர்ந்துவிடும். எஜமான் பல வருடம் கழித்து வந்தாலும் ஒடி வந்து ஏறி, குழந்தை போல் நடந்து கொள்ளும்.

இந்நிலையில் ஒரு சோகமான சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளாவின் கண்ணூர் மாவட்ட மருத்துவமனையில், எஜமானர் இறந்தது தெரியாமல் சவக்கிடங்கு முன்பு 4 மாதமாக வளர்ப்பு நாய் காத்துக்கிடக்கிறது. இது அங்குள்ள மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு நோயாளியாக ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது சிகிச்சைக்காக அனுமதித்த அவரது உறவினர்களுடன் நாய் ஒன்றும் வந்துள்ளது. நோயாளி இறந்துவிட்ட நிலையில், அவரது உடல் அங்குள்ள சவக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதனை அந்த நாய் பார்த்துள்ளது.

ஆனால் அதன்பிகு மற்றொரு நுழைவு வாயிலில், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை அறியாத அவரது வளர்ப்பு நாய் சவக்கிடங்கு வாயிலில் கடந்த 4 மாதமாக காத்துக் கிடக்கிறது. இதனை கவனித்த மருத்துவமனை ஊழியர் ராஜேஷ் முதலில் நாயை போக வைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த நாய் போகவில்லை. அப்போது தான் அவருக்கு நாய், தன் எஜமானுக்காக காத்திருப்பது தெரிந்தது,

தனது எஜமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, சில நாட்களாக அந்த நாய் உணவு ஏதும் சாப்பிடாமல் இருந்திருக்கிறது. அதன்பின் சிலர் வழங்கும் பிஸ்கட் மற்றும் இதர உணவு பொருட்களை சாப்பிட்டு தனது எஜமானர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் சவக்கிடங்கு அருகே தொடர்ந்து காத்துக் கிடக்கிறது. எஜமானர் அனுமதிக்கப்பட்ட பிசியோதெரபி கட்டிடத்துக்கும் சவக்கிடங்குக்கும் மாறி மாறி அந்த நாய் சென்று வருகிறதாம். மேலும் அங்குள்ள மற்ற 3 நாய்களுடன் சேராமல் தனியாகவே சுற்றி வந்து எஜமானுக்காக காத்துக்கிடக்கிறது.

இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அந்த நாய்க்கு, அந்த மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து வழங்கி வருகிறார். முட்டை, மீனை விரும்பி சாப்பிடும் அந்த செல்லப்பிராணி சாதத்தை அதிகம் சாப்பிடுவதில்லையாம்- அந்த நாய்க்கு ராமு என டாக்டர் பெயர் வைத்து மருத்துவமனையிலேயே அவர் பராமரித்து வருகிறார்.

எஜமானுக்காக காத்திருக்கும் விஷயத்தை கேள்விப்பட்டு அந்த நாயை வளர்க்க கண்ணூரைச் சேர்ந்த பெண் ஒருவர் முன்வந்துள்ளார். இதனிடையே அப்படி என்ன நாய் அது, அது ரகம் என்ன, ஏன் இவ்வளவு விசுவசமாக ஒரு நாய் இருக்கிறது, நெட்டிசன்கள் அந்த நாய் குறித்து ஆராய்ச்சி செய்ய தொடங்கி உள்ளார்கள்.