தாளவாடி மலை பகுதியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்… ரூ.31.78 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை எம்பி ஆ.ராசா வழங்கினார்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தலமலை கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கோபிசெட்டிபாளையம் ஆர்டிஓ திவ்யபிரியதர்ஷினி தலைமை தாங்கினார். திமுக துணை பொது செயலாளரும், நீலகிரி எம்பியுமான ஆ.ராசா கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விபரங்கள் கேட்டு உடனடியாக தீர்வு காணுமாறு அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து தாளவாடி விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் எம்பி ஆ. ராசாவிடம் வனத்துறை புதியதாக பிறப்பித்த மின் வேலி தொடர்பான புதிய அரசாணையில் உள்ள விதிமுறைகள் விவசாயிகளுக்கு ஏற்றவாறு இல்லை எனவும், இந்த விதிமுறைகளை பின்பற்ற முற்றிலும் இயலாத நிலை உள்ளதால் மின் வேலி தொடர்பான புதிய அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட எம்பி ஆ.ராசா உடனடியாக இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளிடம் பேசி இந்த அரசாணையை திரும்ப பெறுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து வருவாய் துறை சார்பில் 16 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களும், 152 பேருக்கு முதியோர் ஓய்வூதிய தொகைக்கான உத்தரவு, 20 பேருக்கு குடும்ப அட்டை என மொத்தம் 188 பயனாளிகளுக்கு ரூ.31.78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பது. மேலும் தாளவாடி மலைப் பகுதியில் காட்டு யானைகள் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு திமுக சார்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கிரிக்கெட் பேட் கிட் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் சுதாகர், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், தாளவாடி தாசில்தார் ரவிசங்கர், தாளவாடி மேற்கு ஒன்றிய செயலாளர் சிவண்ணா, தாளவாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகராஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தூர், தலமலை ஊராட்சி தலைவர் நாகன் மற்றும் தாளவாடி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். .