நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்.!!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் முதல் நாளான நேற்று டெல்லியில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கிய நிலையில், இன்று முதல் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சிறப்புக் கூட்டத் தொடருக்கான அவை நடவடிக்கைகள் அனைத்தும் இன்று முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திலேயே நடைபெற உள்ளது. இந்த நிலையில், மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் இன்றே தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மக்களவை, மாநிலங்களவை கூடவுள்ள சூழலில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று கூட்டத்தொடரில் பேசிய பிரதமர் மோடி, சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்படும் என கூறியிருந்தார்.

அந்தவகையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் இன்றே தாக்கல் செய்யப்படும் என மத்திய அமைச்சர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்யவுள்ளார். இதன்பின் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீது நாளை விவாதம் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து, நாளை மறுநாள் மாநிலங்களவையில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

எனவே, இந்த மசோதா நிறைவேறும்பட்சத்தில் இனி நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு கிடைக்கும். சுமார் 27 ஆண்டுகளுக்கு மேலாக மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா நிலுவையில் இருக்கும் நிலையில், இதை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா லோக்சபா மற்றும் மாநிலச் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்கிறது. பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கும் அதே பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.