கோவையில் மது குடிக்க பணம் தர மறுத்த பெயிண்டருக்கு கத்தி குத்து- ரவுடிக்கு போலீஸ் வலைவீச்சு.!!

கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் செல்வம் (வயது 34). பெயிண்டர்.
சம்பவத்தன்று இவர் சிங்காநல்லூரில் இருந்து ராமநாதபுரத்துக்கு பஸ்சில் வந்தார். அப்போது அதே பஸ்சில் பயணம் செய்த மணிகண்டன் என்ற குண்டு மணிகண்டன் என்பவர் செல்வத்திடம் மது குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். பஸ் ராமநாதபுரம் சிந்தாமணி பஸ் நிறுத்தம் வந்ததும் செல்வம் பஸ்சை விட்டு இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார்.

அப்போது அவரை மணிகண்டன் பின் தொடர்ந்து சென்றார். திடீரென அவர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மிரட்டி பணம் கொடுக்கும்படி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குண்டு மணிகண்டன் தான் வைத்து இருந்த கத்தியால் செல்வத்தை குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள குண்டு மணிகண்டனை தேடி வருகிறார்கள்.
இவர் மீது ஏற்கனவே கோவை மாநகர பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.