திமுகவில் பல பிரிவுகள் இருந்தாலும் நாம் அனைவரும் ஒரே அணியாக செயல்பட வேண்டும்- உதயநிதி பேச்சு..!!

காஞ்சிபுரம்: திமுக-வில் பல பிரிவுகள் இருந்தாலும், அனைவரும் ஒரே அணியாக செயல்பட வேண்டும் என்று, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, அக்கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆர்.என். கண்டிகை கிராமத்தில் கலைஞர் திடலில், திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் மற்றும் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் க.சுந்தர் தலைமை தாங்கினார். இந்த விழாவில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழிகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நமது கட்சியில் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி என பல அணிகள் இருக்கலாம். ஆனால் நாம் அனைவரும் ஒரே அணி. தந்தை பெரியார் அணி. பேரறிஞர் அண்ணா அணி, கலைஞர் அணி, நம் தலைவர் அணி என்ற வகையில் நமது பயணம் இருக்க வேண்டும்.

பொதுமக்கள் பலர் என்னிடம் மனுக்களை அளிக்கின்றனர். அந்த மனுக்கள் முதலமைச்சரிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வரவு வைக்கப்பட்டுள்ள நிதிக்கு, வங்கி மூலம் வழங்கப்படும் வட்டியினை ஏழை மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவசரத் தேவைக்காக வழங்கப்பட உள்ளது.

எனவே எந்த ஒரு உதவி தேவை என்றாலும் அதனை மனுவாக அளியுங்கள். அதனை பரிசீலனை செய்து அவர்களுக்கான உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் ஜி.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.அப்துல்மாலிக் வரவேற்றார். ஒன்றியச் செயலர்கள் ஞானசேகரன், குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.