எடப்பாடி எடுத்த அதே அஸ்திரத்தை அவருக்கே திருப்பி அனுப்பும் ஓபிஎஸ்-ன் மாஸ்டர் பிளான்..!!

சென்னை: அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்த ஓ பன்னீர்செல்வம் விரைவில் கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் முடிவில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது . இன்னொரு பக்கம் அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை இன்னும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை.

அதாவது எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை இன்னும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை.

ஓ பன்னீர்செல்வமும் தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக மனு தாக்கல் செய்து இருக்கிறார். இன்னொரு பக்கம் அதிமுகவில் துணை எதிர்க்கட்சி தலைவர் மாற்றப்பட்டதை இன்னும் சபாநாயகரும் அங்கீகரிக்கவில்லை.

இதன் காரணமாக இன்னும் பேப்பர்படி ஓ பன்னீர்செல்வம்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். அவர் இன்னும் கட்சியில் நீடிக்கிறார். இதே லாஜிக்ப்படி பார்த்தால் சமீபத்தில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு வைத்தியலிங்கத்தை இணை ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார். அதுவும் செல்லாது. எனவே இப்போதும் எடப்பாடி பழனிசாமிதான் இணை ஒருங்கிணைப்பாளர். கட்சியில் இப்போது வரை எதுவும் “சட்டப்படி” மாற்றம் அடையவே இல்லை.

இந்த நிலையில்தான் அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் முடிவில் ஓ பன்னீர்செல்வம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. சட்டப்படி இன்னும் தான்தான் ஒருங்கிணைப்பாளர் என்பதால் அதை பயன்படுத்தி புதிய நிர்வாகிகளை ஓ பன்னீர்செல்வம் நியமிக்க முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஓபிஎஸ் சமீபத்தில் புதிதாக 14 மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டார். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல முக்கியமான மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

தற்போது அதன்படியே புதிய மாவட்ட செயலாளர்கள் பலரை ஓபிஎஸ் நியமனம் செய்வார் என்று கூறப்படுகிறது. அதேபோல் தனது சார்பாக புதிய எதிர்க்கட்சி துணை தலைவரை தேர்வு செய்து, அதை சபாநாயகருக்கு அனுப்பும் திட்டத்திலும் ஓபிஎஸ் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. எடப்பாடிக்கு நெருக்கமாக இருந்த ஒருவரை துணை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்து, அவர்கள் குழுவிற்கு உள்ளேயே கழகம் ஏற்படுத்தும் திட்டத்தில் ஓபிஎஸ் இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் அதிமுகவில் புதிய கொறடா, புதிய தலைமை நிலைய செயலாளர், தலைமை கழக உறுப்பினர்களையும் விரைவில் ஓ பன்னீர்செல்வம் நியமிக்க போகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் ஓ பன்னீர்செல்வம் இப்படி புதிய நிர்வாகிகளை நியமித்தால் அது இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து இன்றி சட்டப்படி செல்லுமா என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஓபிஎஸ் தரப்பு.. இந்த நியமனங்களை செல்ல வைக்கும் திட்டத்திலேயே இல்லை என்கிறார்கள்.

ஆம் இந்த நியமனங்களை மேற்கொள்வதே கட்சியில் இரண்டு குழு உள்ளது என்பதை நிரூபிக்கவே. அபப்டி செய்தால் சின்னம் தானாக முடங்கும். தேர்தல் ஆணையம் இரண்டையும் அதிமுக அணிகளாக பிரித்து அங்கீகரிக்கும். அப்படி ஓபிஎஸ் கை ஓங்கும் என்ற திட்டத்தில்தான இந்த நியமனங்களை ஓ பன்னீர்செல்வம் செய்ய போவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக செயல்பட்டு நியமனங்களை செய்து.. ஓபிஎஸ்ஸை ஒதுக்கி வைத்தார். இப்போது அதே அஸ்திரத்தை ஓபிஎஸ் எடப்பாடிக்கு எதிராக பயன்படுத்த உள்ளார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான ரத்தத்தின் ரத்தங்கள்.