ஆபரேஷன் சிங்கப்பூர்… கர்நாடகா காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜக,மஜத கூட்டு சதி – டிகே சிவகுமார் அதிர்ச்சி தகவல்.!

பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜகவும் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து சதித் திட்டம் தீட்டுவதாக அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பகிரங்கமாக குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருந்த ஒரே மாநிலம் கர்நாடகா. இம்மாநில சட்டசபை தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்தது பாஜக. அதுவும் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை உடைத்து, எம்.எல்.ஏக்களை இழுத்து அமைக்கப்பட்டதுதான் கர்நாடகாவில் இருந்த பாஜக ஆட்சி.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா கட்சிகள் பெரும் தோல்வியை சந்தித்தன. இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று முழுமையான பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தாலும் பாஜகவின் அரசியல் சித்துவிளையாட்டுகள் எந்நேரமும் அரங்கேறலாம் என்கிற அச்சம் காங்கிரஸுக்கு உள்ளது.

இன்னொரு பக்கம், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எதிர்காலம் என்ன என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் பாஜகவுடன் இயல்பாகவே கூட்டணி அமைத்தாக வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வலிமையாக இருப்பதை புரிந்து கொண்டு அக்கட்சியுடன் இணக்கமான போக்கை மதச்சார்பற்ற ஜனதா தளம் கடைபிடிக்கலாம்; ஆனால் அக்கட்சியின் வாக்கு வங்கியை சூறையாடி இருக்கிறது காங்கிரஸ். இதனால் பாஜகவுடன் கை கோர்க்கிறது மஜத. இது தொடர்பாக முன்னாள் முதல்வர் குமாரசாமி பூடகமாகவும் கூறியிருந்தார்.

இப்பின்னணியில் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் ஒப்பந்தம் செய்து கொள்ள இருக்கின்றன. இதற்கான ஆலோசனை கூட்டம் பெங்களூர் அல்லது டெல்லியில் நடைபெறப் போவது இல்லை. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சிங்கப்பூர் நாட்டில் நடைபெற உள்ளது. இதற்காக சிங்கப்பூர் செல்ல விமான டிக்கெட்டுகளை புக் செய்து வைத்திருக்கின்றனர். எங்களுடைய எதிரிகள் நண்பர்களாக ஒன்றிணைகிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்பது எங்கௌக்கு தெரியாது. ஆனால் நிலைமைகளை உன்னிப்பாக காங்கிரஸ் கட்சி கவனித்து வருகிறது. இவ்வாறு டிகே சிவகுமார் கூறினார்.