டிஜிட்டல் காயின் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது: ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்..!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் டிஜிட்டல் காயின் மூலம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி நிறுவனம் நடத்தி வந்தவரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

ஓசூரைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஏ.கே. டிரேடர்ஸ் என்கிற நிறுவனம் மூலமாக யுனிவர் (டிஜிட்டல்) காயின் என்கிற திட்டத்தைத் தொடங்கினார். இதில், முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் வழங்கப்படும் என விளம்பரம் செய்தார். மேலும், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பலரிடம் பணம் முதலீடு பெற்று பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கடந்த பிப்ரவரியில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக அருண் குமார், முகவர்கள் நந்தகுமார், சங்கர், சீனிவாசன், பிரகாஷ், வேலன் ஆகிய 6 பேர் மீது மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சங்கர், சீனிவாசன், பிரகாஷ், ஞானசேகரன் ஆகியோரைக் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த அருண்குமாரை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறியதாவது: “முதலீடு பணத்தில் அருண்குமார் தனது பெயரிலும், மனைவி சந்திரா பெயரிலும் கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் வீடு, வீட்டுமனைகள் வாங்கியுள்ளார். அவரை கைது செய்யும் போது, அவரது காரில் இருந்த ரூ.16 லட்சம் ரொக்கம், அவர் அணிந்திருந்த ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள 10.5 பவுன் நகைகள், ரூ.25 லட்சம் மதிப்புள்ள கார்,

செல்போன் உள்ளிட்ட மொத்தம் ரூ.45.65 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் மற்றும் ரூ.2 கோடியே 56 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகள் என ரூ.3 கோடியே 1 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் சிறப்பு நீதிமன்றத்தில் கைதான அருண் குமார் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.