புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு, மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு (சிஐஎஸ்எப்) மாற்றப்பட்டு உள்ளது…

நாடாளுமன்ற பாதுகாப்பு பணியை டெல்லி போலீஸார் மேற்கொண்டு வந்தனர். கடந்த 13-ம் தேதி மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் திடீரென எம்பிக்கள் அமர்ந்திருந்த பகுதியில் குதித்து வண்ண புகை குப்பிகளை வீசினர். இதன்காரணமாக மக்களவை புகை மண்டலமாக மாறியது. இருவரும் ஷூக்களில் வண்ண புகை குப்பிகளை மறைத்து எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இந்த பாதுகாப்பு குறைபாடு சம்பவத்தைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு (சிஐஎஸ்எப்) மாற்றப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்திருக்கிறது. விமான நிலையங்கள், துறைமுகங்கள், அணு மின் நிலையங்கள் என நாடு முழுவதும் சுமார் 350 இடங்களில் சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது நாடாளுமன்றத்திலும் சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். டெல்லி போலீஸார், நாடாளுமன்ற பாதுகாப்பு படை (பிஎஸ்எஸ்), நாடாளுமன்ற பாதுகாப்பு குழுவை (பிடிஜி) சேர்ந்த வீரர்களும் சிஐஎஸ்எப் வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.