மனித உணர்வுகளுடன் களமிறங்கும் புதிய ரோபோ: ஜப்பான் விஞ்ஞானிகள் அசத்தல்.!!

ஜப்பானில் உள்ள RIKEN கார்டியன் ரோபோ திட்டத்தின் ஆராய்ச்சியாளர்கள் மனித வடிவாலான குழந்தை ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

மகிழ்ச்சி, சோகம், பயம், கோபம், ஆச்சரியம் மற்றும் வெறுப்பு ஆகிய ஆறு அடிப்படை உணர்ச்சிகளை வெற்றிகரமாக வெளிப்படுத்தக்கூடிய ஆண்ட்ராய்டு குழந்தை ரோபோவிற்கு ‘நிகோலா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ தனது செயற்கையான தசைகளை நகர்த்துவதன் மூலம் மனிதர்களை போன்றே உணர்ச்சி ஸ்பெக்ட்ரமை வெளிப்படுத்துகிறது.

இந்த செயற்கை தசைகளை கட்டுப்படுத்த நிகோலா ரோபோவிற்கு 29 நியூமேடிக் ஆக்சுவேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதில் 6 ஆக்சுவேட்டர்கள் தலை மற்றும் கண் பார்வை இயக்கங்களைக் கட்டுப்படுத்துகின்றன. யூமேடிக் ஆக்சுவேட்டர்கள்தான் மகிழ்ச்சி அல்லது வெறுப்பு போன்ற வழக்கமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. ‘கன்னத்தை உயர்த்தி’ மற்றும் ‘லிப் புக்கர்’ போன்ற பல முக அசைவுகளை அசத்தலாக செய்கிறது ரோபோ. பொதுவாக இவ்வகை முகபாவனைகளை வெளிப்படுத்தும் ரோபோவை ஃபேஷியல் ஆக்ஷன் கோடிங் சிஸ்டத்தின் (FACS) அடிப்படையில் ஆய்விற்கு உட்படுத்துவார்கள். அதன் முடிவில் நிகோலாவின் முக அசைவுகள் உண்மையான மனிதனின் உணர்ச்சிகளை துல்லியமாக வெளிப்படுத்துவதை காண முடிந்தது.

அதன் பிறகு பொதுமக்கள் பார்வைக்கு வைத்து இரண்டாவது சோதனையை நடத்தியுள்ளனர். இதில் நிகோலாவின் உணர்ச்சிகள் என்னென்ன என்பதை பொதுமக்கள் கண்டறிகிறார்களா என சோதனை செய்துள்ளனர். நிகோலாவின் சிலிகான் தோல் உண்மையான மனித தோலை விட குறைவான மீள்தன்மை கொண்டது என்பதால் சுருக்கங்களை உருவாக்க முடியாது. இதனால், வெறுப்பு போன்ற ஓரிரு உணர்ச்சிகளை அடையாளம் காண்பது மக்களுக்கு கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது.ஆனாலும் குறுகிய காலத்தில், நிகோலா போன்ற ஆண்ட்ராய்டுகள் சமூக உளவியல் அல்லது சமூக நரம்பியல் அறிவியலுக்கான முக்கியமான ஆராய்ச்சி கருவிகளாக செயல்பட வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நிக்கோலோவிற்கு தற்போது தலை பாகம் மட்டும் உருவாக்கப்பட்டிருக்கிறது. RIKEN கார்டியன் ரோபோ திட்டத்தின் விரைவில் மற்ற பாகங்களையும் உருவாக்கி , மக்களுக்கான சிறந்த மனித ரோபோவை தங்களால் வழங்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.