உ.பி சட்டமன்ற தேர்தலில் பெற்றோர்கள் ஓட்டு போட்டால் பிள்ளைகளுக்‍கு 10 மார்க் : லக்னோ கல்லூரி புதிய முயற்சி.!!

லக்னோ: உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பெற்றோர்கள் வாக்களித்தால், அவர்களின் பிள்ளைகளுக்கு 10 மதிப்பெண்கள் அளிக்கப்படும் என லக்னோவில் உள்ள கிறிஸ்ட் தி சர்ச் கல்லூரி தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நேற்று  காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் இதுவரை மூன்று கட்டத்தேர்தல் முடிந்துள்ள நிலையில், பிலிபித், லக்கிம்பூர் கேரி, சீதாபூர், ஹர்தோய், உன்னாவ், லக்னோ, ரே பரேலி, பண்டா, ஃபதேபூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று நான்காம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. 624 வேட்பாளர்கள் இத்தேர்தல் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையில், தேர்தலில் பெற்றோர்கள் வாக்‍களித்தால் பிள்ளைகளுக்‍கு 10 மதிப்பெண்கள் தரப்படும் என லக்னோ கல்லூரி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கல்லூரி முதல்வர் ராகேஷ் குமார், வாக்களிப்பது ஒரு இன்றியமையாத கடமை என்பதை அனைவருக்கும் உணர்த்தவும், 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யவும் இதுபோன்ற முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இத்திட்டத்தின் மூலம் மதிப்பெண்கள் குறைவாக பெற்றவர்களும் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்பதால் மாணவர்கள் மத்தியில் ஒரு உத்வேகம் ஏற்படும் என்றும் கூறினார். இதுபோன்ற புதுமையான திட்டங்களுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.