சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று மதியம் 12 மணிக்கு ஆளுநர் ஆர்.என் ரவியை ராஜ் பவனில் சந்திக்க உள்ளார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு விலக்கு விவகாரம் முக்கிய பேசுபொருளாகவே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் கிட்டதட்ட அனைத்து கட்சிகளும் நீட் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
நீட் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்து முன்னாள் நீதிபதி ஏகே ராஜன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், கடந்த ஆண்டு செப். மாதம் நீட் விலக்கு மசோதா தமிழக சட்டசபையில் முழு மனதாக நிறைவேற்றப்பட்டது.
சுமார் 6 மாதங்களாக ஆளுநர் இந்த விவகாரத்தில் எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருந்த நிலையில், கடந்த பிப். மாதம் நீட் விலக்கு மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பினார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சிறப்புச் சட்டசபை கூட்டப்பட்டு, மீண்டும் நீட் விலக்கு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலும் இது தொடர்பாக திமுக எம்பிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இன்று மக்களவையில் நீட் விலக்கு தொடர்பாக விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு திமுக நோட்டீஸ் வழங்கியுள்ளது. ஒத்திவைப்பு தீர்மானம் தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் வழங்கினார்.
இந்தச் சூழலில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 15) மதியம் 12 மணிக்கு ஆளுநர் ஆர்.என் ரவியை ராஜ் பவனில் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பின் போது நீட் விலக்கு தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வரும் ஆளுநரும் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Leave a Reply