தேசிய கொடி அருகில் பாகிஸ்தான் வீரரை நிற்க வைத்த நீரஜ் சோப்ரா – நெகிழ்ச்சி சம்பவம்.!!

19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது. இதில் கடந்த 27ம் தேதி கடைசி நாள் போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதிசுற்று போட்டி நடந்தது.

இதில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கையில் இந்தியா முழுவதும் ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா மற்ற வீரர்களைக் காட்டிலும் பின்தங்கியே இருந்தார். ஆனாலும், சுதாரித்துக் கொண்ட  அடுத்த சுற்றிலேயே மீண்டு வந்தார். எதிர்பார்த்தபடியே அவர் அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அவருக்கு சவாலாக இருந்த பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

இறுதிப் போட்டியின் முடிவில், கையில் தேசிய கொடியில்லாமல் நதீம் தவித்துக் கொண்டிருந்தார். அப்போது, நீரஜ் மைதானத்தில் புகைப்படம் எடுக்க நதீமை அழைத்தார். நதீம் உடனடியாக இந்தியாவின் மூவர்ண கொடியை ஏந்திய நீரஜ் சோப்ராவுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்தார். அவர்களுடன் வெண்கலப் பதக்கம் வென்ற செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜும் நின்றார். சாம்பியன் நீரஜ் மற்றும் நதீம் இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்த தருணம் புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவாகி, சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. நீரஜ் சோப்ராவின் செயலுக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.