கோவை அருகே 6 பஸ்களை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியல்..!

கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூரில் இருந்து இக்கரை போளுவாம்பட்டி செல்லும் வழியில் உள்ளது தென்னமநல்லூர் கிராமம். இந்த ஊரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே வாழ்கிறார்கள். இவர்கள் விளைபொருட்களை காலை வேளையில் வரும் பஸ்களில் ஏற்றி உழவர்சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வார்கள். ஆனால் கடந்த ஒரு மாதமாக அதிகாலை 5.30 மணி மற்றும் 6 மணிக்கு செல்லும் அரசு பஸ்கள் அங்கு இயக்கப்படவில்லை. இதனால் விளைபொருட்களை உழவர்சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதேபோல மற்ற நேரங்களில் இயக்கப்படும் பஸ்களும் சரியான நேரத்துக்கு செல்லவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் அவதிக்குள்ளானார்கள்.
இதுதொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை தென்னமநல்லூர் மெயின் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 4 அரசு பஸ்கள் மற்றும் 2 தனியார் பஸ்களை அவர்கள் சிறைபிடித்தனர். அப்போது மழை பெய்து கொண்டே இருந்தது. அதனை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போக்குவரத்து கழக அதிகாரிகள் நேரில் வந்து இனிமேல் பஸ்கள் சரியான நேரத்துக்கு வரும் என்று எழுதிக் கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம். அதுவரை போராட்டத்தை தொடருவோம் என்றனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து அதிகாரிகள் கழக அதிகாரிகள் நேரில் வந்து அவர்களை சமரசம் செய்தனர்.