இனி தேசியக் கொடியை இரவிலும் பறக்கவிட அனுமதி .. மத்திய அரசு திருத்தம்..!!

தேசியக் கொடியை இரவிலும் பறக்கவிட அனுமதிக்கும் வகையில் விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.

நாட்டின் 75ஆஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்றுமாறு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா். இந்நிலையில், தேசியக் கொடி தொடா்பான விதிமுறைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகளுக்கு உள்துறைச் செயலா் அஜய் பல்லா அனுப்பியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது, இந்திய தேசியக் கொடி ஏற்றப்படுதல், பயன்பாடு ஆகியவை கடந்த 2002-ஆம் ஆண்டின் இந்திய தேசியக் கொடி சட்டம் மற்றும் 1977-ஆம் ஆண்டின் தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

தேசியக் கொடியை பொதுமக்களின் வீட்டில் வெளிப்படையாக காட்சிப்படுத்தவும், அதனை பகல் மட்டுமன்றி இரவிலும் பறக்கவிடவும் அனுமதிக்கும் வகையில் இந்திய தேசியக் கொடி சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேபோல், கைகளால் நூற்கப்பட்ட தேசியக் கொடி மட்டுமன்றி இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட கொடிகளையும் பயன்படுத்தலாம். பருத்தி, பாலியஸ்டா், கம்பளி, காதி பட்டு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட கொடிகளாக அவை இருக்கலாம். இதற்குரிய விதிமுறை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அறியும்படி செய்யுமாறு, அவர் தனது கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளாா்.

முந்தைய விதிமுறைகளின்படி, தேசியக் கொடியானது சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை பறக்கவிட அனுமதி இருந்தது. இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட மற்றும் பாலியஸ்டா் கொடிகள் அனுமதிக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.