ஜாதிப் பெயரை கூறி இழிவாக பேசிய தலைமை காவலரை ஆயுதப்படைக்கு மாற்றம்… போனில் போலீசாரை தகாத வார்த்தையில் பேசிய வாலிபர் கைது..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயா. இவர் தனியார் வங்கியில் லோன் கொடுக்கும் குழு தலைவராக உள்ளார்.  குழு உறுப்பினர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றால் நாளொன்றுக்கு ரூ.1000 வீதம் தனியார் வங்கியில் ஹெல்த் இன்சூரன்ஸ் மூலமாக லோன் பெற்று தருவதாக உறுப்பினர்களை சேர்த்துள்ளார். அந்த வகையில் காவிலிபாளையத்தை சேர்ந்த குழு உறுப்பினர் பிரியதர்ஷினியின் கணவர் கிருஷ்ணகுமார் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனையில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பி உள்ளார். இந்நிலையில் விஜயாவின் வீட்டிற்கு மது போதையில் சென்ற கிருஷ்ணகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கு ரூ.5000  பணம் வேண்டும் என தகராறில் ஈடுபட்டதோடு விஜயாவை இழுத்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பிரபாகரன் என்பவர் புஞ்சை புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் மூலம் தகவல் சொல்லியுள்ளார். அப்பொழுது அவரது போனை கிருஷ்ணகுமார் வசம் கொடுத்து பேச சொன்ன போது புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் பணியில் இருந்த தலைமை காவலர் சிவகுமாருடன் போனில் பேசும்போது
டேய்..நீ ஸ்டேஷனுக்கு வருகிறாயா அல்லது நாங்கள் அங்கு வரட்டுமா எனக் கூறுகிறார். அதனைத் தொடர்ந்து அவரது பிறப்பு குறித்தும் ஜாதி பெயரை கூறியும் ஒருமையில்
இழிவாகவும், ஆபாசமாக திட்டுகிறார். இந்த உரையாடலை போனில் பேசிய கிருஷ்ணகுமார் மற்றொரு போனில் பதிவு செய்து ஆடியோவை  சமூக வலை தளங்களில் வெளியிட்டார். தற்போது இந்த ஆடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. காவல் நிலையத்துக்கு போன் செய்து பேசும் நபரிடம் தரக்குறைவாக காவலர் பேசும் ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஜாதி பெயரை கூறி இழிவாகவும் பிறப்பு குறித்து தரக்குறைவாகவும் பேசிய காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்த ஆடியோ குறித்து ஈரோடு எஸ்பி சசி மோகனுக்கு புகார் சென்றது. இதுகுறித்து விசாரணை நடத்திய எஸ்பி தலைமை காவலர் சிவக்குமார் தரக்குறைவாக பேசியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை ஈரோடு ஆயுதப் படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இதற்கிடையே கிருஷ்ணகுமார் போனில் போலீசாரிடம் அசிங்கமாக பேசியதாக  வழக்கு பதிவு செய்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் கிருஷ்ணகுமாரை கைது செய்து சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.