சீன குழுவினர் கொண்டு வந்த மர்ம பை… பரிசோதனைக்கு உட்படுத்த மறுப்பு- டெல்லியில் பரபரப்பு.!!

புதுடில்லி: ஜி20 மாநாட்டில் பங்கேற்க வந்த சீன குழுவினர் கொண்டு வந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் எவ்வளவு வலியுறுத்தியும் அவர்கள் அதனை பரிசோதிக்க அனுமதிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக டில்லி போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: ஜி20 மாநாட்டில் பங்கேற்க சீன பிரதமர் லி கெகியாங் தலைமையிலான குழுவினர் டில்லி வந்தனர்.
அவர்கள் தாஜ் பேலஸ் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அதில், குழுவினர் கொண்டு வந்த பைகள் வித்தியாசமாக இருந்தது. இது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் தூதரக வழிமுறைகளின்படி அந்த பைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.பிறகு, அவர்கள் தங்கியிருந்த அறைக்கு பணி நிமித்தமாக சென்ற ஊழியர் ஒருவர், இரண்டு பைகளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனை, அங்கு பாதுகாப்பில் இருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தார்.உடனடியாக அந்த அறைக்கு சென்ற அதிகாரிகள், குறிப்பிட்ட பைகளை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், தூதரக வழிமுறைகளைக் கூறி பரிசோதனைக்கு உட்படுத்த மறுத்தனர். இதனால், அதிகாரிகள் குழுவினர் தங்கியிருந்த அறை வாசலில் சுமார் 12 மணி நேரம் காத்திருந்தனர். ஆனால், எதற்கும் சீன குழுவினர் உடன்படவில்லை.பிறகு ஒரு வழியாக அந்த பைகளை டில்லியில் உள்ள சீன தூதரகத்திற்கு அனுப்பி வைக்க ஒப்புக் கொண்டனர். ஆனாலும், அதனை பரிசோதனை செய்ய அனுமதிக்கவில்லை.இவ்வாறு டில்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.