சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம்-குடியரசுத் தலைவர் உத்தரவு..!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜி கடந்த நவம்பர் மாதம் மேகாலயா மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யபப்ட்டார்.

இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார்.

அலகாபாத் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவி ஏற்றார்.

அவரை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவின் கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி மற்றும் கடந்த ஐனவரி 29-ந் தேதி நடைபெற்றது. அப்போது இந்த முடிவை கொலீஜியம் எடுத்துள்ளனர். பின்னர், இதுதொடர்பான பரிந்துரையை மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) ஒன்றிய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று பொறுப்பு நீதிபதியாக உள்ள முனீஸ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில், 1960-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி பிறந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக 2007-ம் ஆண்டு பதவி ஏற்றார். பின்னர், கடந்த 2019-ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். தற்போது அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.