கேரளாவில் புதிதாக பரவும் குரங்கு காய்ச்சல்: இளைஞர் மருத்துவமனையில் அனுமதி..!!

கேரளா மாநிலத்தில் குரங்கு காய்ச்சல் காரணமாக, இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்துக்கு உட்பட்ட பனவல்லி என்ற பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது, மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தெற்கு பகுதியில் பரவக்கூடிய பருவகால காய்ச்சலாக கருதப்படும் குரங்குக் காய்ச்சல், நடப்பாண்டில்பாதிப்பு இருப்பது இதுவே முதல் முறை. குரங்குகள் மூலம் பரவக்கூடிய இந்த தொற்று குறித்து, ஏற்கனவே உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், பழங்குடி இன கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் உறுதியாகி இருப்பது தெரியவந்துள்ளது.

மானந்தவாடி மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த இளைஞர், தற்போது மருத்துவ கண்காணிப்பில் தீவிர சிகிச்சை இருந்து வருகிறார். இளைஞரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், இந்த குரங்கு காய்ச்சலால் வேறு ஏதேனும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், தற்போது வரை இந்த இளைஞரை தவிர வேறு யாருக்கும் குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.