பப்ஜி கேமுக்கு இந்தியாவில் தடை: மத்திய அரசு தகவல்.!!

இந்தியாவுக்கான பிரத்யேக பப்ஜி கேமை தடை செய்ய உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா காலக்கட்டத்தில் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மாணவர்கள், சிறுவர்கள் பலர் பப்ஜி கேமுக்கு அடிமையாகினர். அதேநேரத்தில் இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையைத் தொடர்ந்து இந்தியாவில் சீன மொபைல் ஆப்களுக்கு அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டது. அதில் பப்ஜியும் ஒன்று. இந்தியர்களின் தகவல் திருட்டு, இறையாண்மை, பாதுகாப்பு போன்ற பல்வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு, 2020ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் பப்ஜி உள்ளிட்ட மொபைல் ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

எனினும் சிறிது காலத்திலேயே புதிய அவதாரத்தில் பப்ஜி மீண்டும் வந்தது. பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா (Battlegrounds Mobile India) என்ற பெயரில் இந்தியாவுக்கான பிரத்யேக பப்ஜி கேம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய பப்ஜி நிறைய சிறப்பு அம்சங்களுடன் கேமர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. மீண்டும் சிறுவர்களும் இளைஞர்களும் பப்ஜி விளையாட்டில் மூழ்கிவிட்டனர். இந்நிலையில், இந்திய பப்ஜி கேமை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு NGO அமைப்பு ஒன்று கோரிக்கை வைத்துள்ளது. இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேமை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவில் பப்ஜி கேமுக்கு தடை விதிக்கப்படும் என்று தகவல் தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.