சிறு, குறு தொழில் நிறுவனங்களுடன் அமைச்சர் அன்பரசன் இன்று பேச்சுவார்த்தை..!

சென்னை: வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சிறு, குறு நிறுவனங்களுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

சிட்கோ வளாகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. தொழில்துறையினருக்கு உயர்த்திய மின்கட்டணத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 6 கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் காரணமாக ஒரே நாளில் ரூ. 9000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டது.

தொழில்துறையினருக்கு உயர்த்திய மின்கட்டணத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 6 கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு தொழில் அமைப்புகள் சார்பில் நேற்றைய தினம் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

40,000 சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. ஈரோட்டில் தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் வேலைநிறுத்தத்திலும், பண்ருட்டியில் 300க்கும் மேற்பட்ட முந்திரி தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.

மதுரையில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் போராட்டத்தில் பங்கேற்றன. திருப்பூரில் பனியன், நிட்டிங், பிரிண்டிங் என 10,000 நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, நாமக்கல், திருவள்ளூர், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ரூ.9000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து சிறு, குறு நிறுவனங்கள் போராட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை மேற்கொண்டார். தொழில் நிறுவனங்களுக்கு மேலும் சலுகைகள் அறிவிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை செய்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சிறு, குறு நிறுவனங்களுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். சிட்கோ வளாகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு மின்கட்டண குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.