சென்னை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்களால், தங்களைத் தாங்களே நிர்வாகம் செய்து கொள்ளும் அதிகாரம் பெற்ற சுயசார்பு அமைப்பாகும். அதில் ஆளும் கட்சியோ, வேறு எந்த அமைப்புகளோ தலையிட அதிகாரம் இல்லை. ஆனால், ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற அரசு மருத்துவர்களே இதில்பெரும்பாலும் போட்டியிட்டுவெற்றி பெறுகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு கடந்த அக்.19-ம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியானது. இந்த தேர்தல், தபால் வாக்கு சீட்டு மூலம் டிச.19 முதல் ஜன. 19-ம் தேதி வரை நடக்க உள்ளது.
தேர்தல் அறிவிப்புக்கு முன்புவெளியிடப்பட வேண்டிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. மிகுந்த வற்புறுத்தலுக்கு பிறகு கிடைத்த வாக்காளர் பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. இறந்த மருத்துவர்கள் 117பேரின் பெயர்கள் பட்டியலில்சேர்க்கப்பட்டுள்ளன.
சரியான வாக்காளர் பட்டியல் இல்லாமல் தேர்தல் நடத்தப்படுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. தேர்தல் முறையாக நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தபால் மூலம் நடத்தப்படும் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஆன்லைன் முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதே பெரும்பாலான மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.
மேலும், இந்த தேர்தலை நடத்தக்கூடிய பதிவாளர் நியமனமும் முறைப்படி நடக்கவில்லை. அவர் 63 வயதாகியும் இப்பணியில் தொடர்கிறார். எனவே, தேர்தல்நியாயமாக, நேர்மையாக நடைபெற வாய்ப்பு இல்லை. தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்றால் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் நடைபெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply