கோடையில் தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் இருக்காது – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி..!

திருச்சி: ‘கோடை காலத்தில் தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. குறிப்பாக சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு’ என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி உறையூர் தாக்கர்ரோடு வள்ளுவர் தெருவில் ரூ.3.35 லட்சத்தில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி, கோனக்கரை ரோடு செல்வமுத்து மாரியம்மன் கோயில் தெருவில் ரூ.1 லட்சத்தில் அமைத்த ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: கோடை காலத்தில் தமிழ்நாட்டில் எந்தவித தண்ணீர் தட்டுப்பாடும் இருக்காது. குறிப்பாக சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. கோவையை பொறுத்தவரை சிறுவாணி அணையில் மழை பெய்யாததால் தண்ணீர் இல்லை. பில்லூர் அணை மூலம் தண்ணீர் வழங்குவதற்கான பணிகள் இன்று (நேற்று) முதல் துவங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வரும் ஏப்ரல் 1ம் தேதி 170 எம்எல்டி திறந்து விடப்படவுள்ளது. சேலத்தில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 58டிஎம்சி வழங்கப்படவுள்ளது.

சங்கரன்கோவில், நாகர்கோவில், விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூரில் கோடைகாலத்தில் எந்தவித தண்ணீர் தட்டுப்பாடும் வந்து விடக்கூடாது என்பதற்காக திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம் துவங்குவதற்கான ஆய்வு விரைவில் நடத்தப்படவுள்ளது. அதற்கான குழு விரைவில் வரவுள்ளது. திருச்சி காவிரி பாலத்தில் சீரமைப்பு பணி முடிந்து வரும் 3ம் தேதிக்குள் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.