பிரதமர் மோடி பேரணியில் பாதுகாப்பையும் மீறி பறந்த மர்ம ட்ரோன்: சுட்டு வீழ்த்திய கமான்டோக்கள் – 3 பேர் கைது..!

குஜாரத் மாநிலத்தில் பிரதமர் மோடி பரப்புரையில் ஈடுபட்ட போது அவரது பாதுகாப்பை மீறி ட்ரோன் ஊடுருவிய விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த மாதம் இரு கட்டங்களாக நடைபெறுகிறது.

முதல் கட்ட வாக்கு பதிவு டிசம்பர் 1ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ஆம் தேதியும் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றைக்கே அறிவிக்கப்படுகிறது. தேர்தல் வெற்றிக்காக ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. பாஜகவுக்காக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு தொகுதிகளில் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள பாவ்லா பகுதியில் நேற்று பிரதமர் பரப்புரை மேற்கொண்டார்.

பிரதமரின் வருகையை ஒட்டி அங்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக பிரதமர் வருகை தரும் இரு கிமீ சுற்றளவு தூரத்தை ‘No fly zone’ ஆக அறிவித்து ட்ரோன் உள்ளிட்ட விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், நேற்று மாலை 4.30 மணி அளவில் பிரதமர் மோடி பரப்புரை செய்யவிருந்த மைதானம் அருகே திடீரென்று ஒரு ட்ரோன் பறந்து பரபரப்பை கிளப்பியது.

இதை கவனித்த பிரதமரின் பாதுகாவலர்கள் அலெர்ட் கொடுத்தனர். தொடர்ந்து அந்த ட்ரோனை என்எஸ்ஜி கமான்டோக்கள் சுட்டு வீழ்த்தினர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் அங்கு விரைந்து ஆய்வு செய்த நிலையில், அந்த ட்ரோனில் வெடிபொருள்கள் போன்ற எந்த ஊறு விளைவிக்கும் பொருள்களும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இந்த ட்ரோனை இயக்கிய விவகாரத்தில் மூவரை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது. இவர்கள் மூவரும் பிரதமரின் பேச்சை பதிவு செய்யத்தான் ட்ரோனை பயன்படுத்த நினைத்ததாக கூறப்பட்டாலும், தடையை மீறி இவர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்றும் பின்னணியில் ஏதேனும் தகவல்கள் உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகிறது.