மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் கட்டாயம் – பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் ..!

க்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டபோதிலும், உயிரிழப்புகளை தடுக்க முடிந்ததே தவிர, நோய்த் தொற்றிலிருந்து முழுமையாக விடுபட முடியவில்லை. பல்வேறு வகையிலான கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், முதல் கட்டமாக மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனக் கூறியுள்ள பொது சுகாதாரத்துறை, திரையரங்கம், சிறுவர் பூங்கா, உணவு விடுதிகள், கடற்கரை பகுதிகளுக்கு செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.