கேரள ரயிலில் தீ.. குற்றவாளி டைரியில் கன்னியாகுமரி பெயர் இடம் பெற்றது ஏன்..? பயங்கரவாத சதியா.. காவல்துறை விசாரணை..!

கேரள ரயிலில் ஏற்பட்ட தீ சம்பவம் பயங்கரவாதிகளின் சதியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

நேற்றிரவு ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தீயை கண்டதும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்தனர். 9 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அப்போது ரயிலில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட அதில் ஒரு பயணி அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினார். அந்த நேரத்தில் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து கேரள காவல்துறை, ரயில்வே காவல்துறை, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேரள ரயிலில் தீ வைத்த நபருடையது என சந்தேகிக்கப்படும் பை ஒன்றை கைப்பற்றி காவல்துறை சோதனை செய்தனர்.அந்த பையில் இருந்த டைரியில் ஹிந்தி, ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள குறிப்புகள் கிடைத்துள்ளன. அதில், கன்னியாகுமரி, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவோயிஸ்டுகள் செயலா அல்லது பயங்கரவாதிகளின் சதியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது..