சொத்துவரி உயர்வு போல் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது…எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

சொத்துவரியை தமிழக அரசு உயர்த்தி உள்ளதை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

2021-22 ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை அறிவிக்க, மத்திய அரசின் 15வது நிதி ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது.

இதன் காரணமாக மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வு செய்ய தமிழக முடிவெடுத்துள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் 25% முதல் 150% வரை சொத்துவரியை உயர்த்தியுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியின் பிரதானப் பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50 சதவிகிதமும், 600 முதல் 1,200 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 75%, 1,201 முதல் 1,800 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 100%, 1,801 சதுர அடிக்கு மேல் உள்ள குடியிருப்புகளுக்கு 150% சொத்து வரி உயர்வதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை தராமல் கைவிரித்த இந்த விடியா அரசு தற்போது நகர்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது, இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.