சேலத்தில் பிரதமர் மோடி பொதுக் கூட்டத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் பங்கேற்பு.!!

சென்னை: சேலத்தில் நாளை நடைபெறும் பிரதமரின் பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் முதல்முறையாக பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ம் தேதியான நாளை மறுநாள் தொடங்குகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை நந்தனம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு கோவை வருகை தரும் பிரதமர் மோடி, பிரமாண்ட வாகனப் பேரணியில் பங்கேற்க உள்ளார்; பேரணியை முன்னிட்டு கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாய்பாபா காலனியில் இருந்து தொடங்கும் வாகனப் பேரணி, கங்கா மருத்துவமனை, வடகோவை, சிந்தாமணி வழியாக ஆர்.எஸ்.புரத்தில் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து நாளை நடைபெறும் பாஜக கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதனிடையே மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் போட்டியிடுகின்றனர். ஓபிஎஸ் அணியினர், அமமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் பங்கேற்கின்றனர்.