காங்கிரஸை கைவிட்ட மம்தா… 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் யார் யார்..? அதிர்ச்சியில் இண்டியா.!

மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், முன்னாள் எம்.பி., மஹுவா மெய்த்ரா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இந்தியா கூட்டணியில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி இணையும் என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்து இருந்தனர். குறிப்பாக பாஜகவிற்கு எதிராக நாடு முழுவதும் இந்தியா கூட்டணியை உருவாக்கி வரும் காங்கிரஸ் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இருப்பினும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கங்களிலேயே தொகுதிகள் வழங்க முடியும் எனவும், இந்தியா கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வெளியேற்ற வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இதனால் பேச்சுவார்த்தைகள் நீண்டு கொண்டே வந்த நிலையில், தற்போது அதிரடியாக மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து மம்தா பானர்ஜி அதிர வைத்துள்ளார். கொல்கத்தா பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் 42 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தனர்.

இதன்படி மக்களவையில் கேள்வி எழுப்ப பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட மஹுவா மொய்த்ராவிற்கு கிருஷ்ணா நகர் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பஹரம்பூர் தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் மூத்த தலைவர்களான சவுகத் ராய், டம் டம் தொகுதியில் இருந்தும், சுதீப் பானர்ஜி கொல்கத்தா உத்தர் தொகுதியில் இருந்தும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அபிஷேக் பானர்ஜி டைமண்ட் ஹார்பர் தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேரணியின் போது பேசிய மம்தா பானர்ஜி, “பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கம் குறித்து குற்றச்சாட்டுகளை முன் வைப்பதற்கு முன்பாக, அதிகாரிகளுடன் அதனை சரி பார்த்துக் கொண்டு பேச வேண்டும். பாஜக குடியுரிமைச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களை அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மேற்குவங்கம் மட்டும் இன்றி அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களிலும் தனித்துப் போட்டியிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் இந்த அதிரடி அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “காங்கிரஸ் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் உடன் மேற்கு வங்கத்தில் மரியாதைக்குரிய தொகுதி பங்கீடு குறித்து பேசி வந்துள்ளோம். இருதரப்பு பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் இந்த அறிவிப்புகள் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம். தனிப்பட்ட அறிவிப்புகளாக இருக்கக் கூடாது என காங்கிரஸ் விரும்பியது. இந்தியா கூட்டணியில் பாஜக எதிர்ப்பு என்ற அடிப்படையில் அனைவரும் இணைய வேண்டும் என விரும்பினோம்” என்று தெரிவித்துள்ளார்.