மேக் இன் இந்தியா திட்டம் – பிரதமர் மோடியை புகழ்ந்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின்..!

ரஷ்யாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டாக்கில் 8வது கிழக்கு பொருளாதார மன்றத்தில்  பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தைப் பாராட்டிப் பேசியுள்ளார்.

மோடி இந்தியர்களை ஊக்குவிப்பதன் மூலம் சரியான செயலைச் செய்கிறார் என்றும் கூறினார்.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கார்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த புடின், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்றும், இந்தியா போன்ற நாடுகள் ஏற்கனவே மோடியின் தலைமையின் கீழ் தங்கள் கொள்கைகள் மூலம் முன்மாதிரியாக உள்ளன என்றும் கூறினார்.

“உங்களுக்குத் தெரியும், அப்போது [1990 களில்] உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்கள் இல்லை. ஆனால் இப்போது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கிறோம். 1990 களில் ரஷ்யா அதிக அளவில் வாங்கிய மெர்சிடிஸ் அல்லது ஆடி கார்களை விட அவை மிகவும் எளிமையானவை என்பது உண்மைதான். ஆனால் இது ஒரு பிரச்சினை அல்ல” என்றார்.

பின்னர், இந்தியாவின் முன்னுதாரணமாகக் காட்டிப் பேசிய ரஷ்ய அதிபர் புடின், “இந்தியா போன்ற பல நாடுகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் பெரும்பாலும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்கள், கப்பல்களை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றனர்.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த விஷயத்தில், மேக் இன் இந்தியா பிராண்டுகளை பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதன் மூலம் பிரதமர் மோடி சரியான செயலைச் செய்கிறார்.” என்று பிரதமர் மோடியை பாராட்டினார். ரஷ்யாவிலும் உள்நாட்டிலேயே தயாரித்த வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவது முற்றிலும் பாதுகாப்பானது என்றும் கூறினார்.

“இது உலக வர்த்தகக் கூட்டமைப்பின் கீழ் உள்ள கடமைகளை மீறுவது ஆகாது. பல்வேறு நிலைகளில் அதிகாரிகள் எந்த கார்களை பயன்படுத்தலாம் என்பது குறித்து நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்களைப் பயன்படுத்துவார்கள்” எனவும் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கார்களை வாங்குவது எளிதாக இருக்கும் என்று புதின் குறிப்பிட்டுள்ளார்.