தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மக்காசோளத்திற்கான விலை முன்னறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் ஆண்டுதோறும் 3.10 கோடி டன் மக்காள சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் சுமார் 36 ஆயிரம் டன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்கள் மக்கா சோளத்தை அதிகளவில் பயிரிடுகின்றன.
தமிழ்நாட்டில் 2020-21-ம் ஆண்டில் 4 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மக்காசோளம் பயிரிடப்பட்டு, 2.56 கோடி டன் மக்காசோளம் உற்பத்தி செய்யப்பட்டது.
சேலம், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மக்கா சோளம் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
வர்த்தக மூலங்களின்படி மக்காசோளம் அதிகமாக பயரிடப்படும் மாநிலங்களில் பயிரின் நிலைமை சீராக இருக்கிறது. கறிக்கோழி, முட்டையின் தற்போதைய விலை நிலவரம் மக்கா சோளத்தின் விலையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிகரிக்கும் விலையானது ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளை பொருத்து அமையும். தென்னிந்திய மாநிலங்களில் மக்கா சோளத்தின் மகசூலில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.
பல்கலைக்கழகத்தின் வேளாண் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்பு திட்டமானது கடந்த 27 ஆண்டுகளாக உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலவிய மக்காசோளம் விலை சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் தரமான மக்கா சோளத்தின் பண்ணை விலையானது குவிண்டாலுக்கு ரூ.1,900 முதல் ரூ.2 ஆயிரமாக இருக்கும். எனவே விவசாயிகள் மேற்கூறிய ஆலோசனையின் அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.