மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா நெருங்கி வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பணிகள் குறித்து மாநில காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
வரும் 17-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, மதுரை மாநகர காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் DGP மகேஷ் குமார் அகர்வால் தீவிர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கோயில் வளாகம் மற்றும் நகரின் முக்கியப் பகுதிகளில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான வியூகங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், குற்றச் செயல்களைத் தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர ரோந்துப் பணிகள் மற்றும் காவல்துறை செயல்பாடுகளையும் அவர் ஆய்வு செய்தார். கும்பாபிஷேகத்தை எந்தவிதத் தடையுமின்றி அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்தி முடிக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் 17.09.2026 அன்று காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரை நடைபெற உள்ளதை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான, சீரான மற்றும் தங்குதடையற்ற போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்துத் துறையின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாளான 16.09.2026 அன்று KCBT (கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்) முதல் மதுரை வரை 50 சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பயணத் தேவைக்கேற்ப இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
இதன் ஒரு பகுதியாக, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து மதுரைக்கு கீழ்க்கண்ட எண்ணிக்கையில் பேருந்துகள் பொதுமக்களின் பயணத் தேவைக்கேற்ப இயக்கப்படும்.
கோயம்புத்தூர் – 30 பேருந்துகள்,,திருப்பூர் – 30 பேருந்துகள், ராமநாதபுரம் – 30 பேருந்துகள், அருப்புக்கோட்டை – 25 பேருந்துகள், சிவகாசி – 30 பேருந்துகள், ராஜபாளையம் – 30 பேருந்துகள் விருதுநகர் – 10 பேருந்துகள், தேனி – 30 பேருந்துகள், திண்டுக்கல் – 20 பேருந்துகள்
மேலும், மதுரை மாநகரப் பகுதியில் திருமங்கலம், மேலூர், திருப்புவனம், வாடிப்பட்டி, நத்தம், பூவந்தி, உசிலம்பட்டி ஆகிய இடங்களில் இருந்து தலா 20 பேருந்துகள் இயக்கப்படும். இவ்விழாவை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மொத்தம் 285 சிறப்புப் பேருந்துகள் போக்குவரத்துத் துறையின் சார்பில் இயக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.









