கடும் வெயிலில் இருந்து ஜில்லென்று மாறிய கோவை

கோவை மாவட்டத்தில் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவ மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மிகக் குறைந்த அளவே பெய்தது. பெரும்பாலான நாட்கள் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. குறிப்பாக இந்த மாதம் தொடக்கம் முதல் கோடை காலத்தை போல் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. சுட்டெரித்த வெயில் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். மேலும் இரவு நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் காணப்பட்டதாலும்,அடிக்கடி மின்தடை ஏற்பட்டதாலும் பொதுமக்கள் மின்விசிறி இல்லாமல் தூங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்நேற்று காலையில் வெயிலின் தாக்கம் காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு பின் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு மேல் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. அப்போது திடீரென்று கோவை மாநகரில் இடியுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக காந்திபுரம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, உக்கடம், டவுன்ஹால், கணபதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.லேசான மழை பெய்ததால் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை நீர் தேங்கியது. பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கஸ்தூரி பாளையம், குப்பிச்சிபாளையம், விவேகானந்தபுரம், ஜோதிபுரம், வித்யாலயம், பாரதி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மதியம் 2- 15மணிக்கு திடீரென்று மழை பெய்தது .பின்னர் சிறிது நேரத்தில் பலத்த மழையாக உருவெடுத்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு சில இடங்களில் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. கோவையில் நேற்று பெய்த மழை காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. இதனிடையே கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் ஒரு சில இடங்களில் கொங்கு மண்டலம் பகுதியிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 19ம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் .மேலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கோவையை சேர்ந்த வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.