3 நம்பர் லாட்டரி நடத்தி பல லட்சம் சுருட்டி கார், பங்களா என சொகுசு வாழ்க்கை-3 பேர் கைது..!

கோவை : தமிழ்நாட்டில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி கேரளாவில் இருந்து பலர் கோவைக்கு லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கேரளா ,பூட்டான் மாநில அரசுகள் நடத்தும் லாட்டரி முடிவுகளின் அடிப்படையில் கடைசி 3 நம்பர்களுக்கு பரிசு வழங்குவதாக ஆன்லைன் மூலம் லாட்டரி நடத்திய கும்பலை சேர்ந்த 3 பேரை துடியலூர் போலீசார் கைது செய்தனர், ‘இதில் சுப்ரமணியம் பாளையம் மருதம் நகரை சேர்ந்த சஜித் (வயது 32 )என்பவர் முக்கிய நபராக செயல்பட்டுள்ளார். இவருக்கு உதவியாக இருந்ததாக விக்னேஷ் ( வயது 31) பிரகாஷ் (வயது 41) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் 3 நம்பர் லாட்டரி நடத்தி பலரிடம் பணம் சுருட்டியது எப்படி? என்று பரபரப்பான தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது .

அதன் விவரம் வருமாறு:- 32 வகையான லாட்டரி களைவெப் பேஜில் இவர்களாகவே தயாரித்து கடைசி 3 நம்பர்களை சொல்லி பதிவு செய்தால் முடிவுகளின் அடிப்படையில் பரிசு வழங்கப்படும் என்றும் பரிசு விழா விட்டால் செலுத்திய பணம் தங்களுக்கே உரியது என்றும் அறிவித்து நீண்ட நாட்கள் நடத்தி வந்துள்ளனர். 2 மணி நேரத்திற்கு ஒருமுறை ஆன்லைன் மூலம் முடிவுகளை அறிவித்து பலரிடம் பணம் வசூலித்துள்ளனர் .பரிசு விழுந்திருப்பதாக குறைந்த தொகையை மட்டும் கொடுத்து மோசடி செய்துள்ளனர். மேலும் மத்திய மாநில அரசுகளுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதுடன் லாட்டரி விற்ற பணத்தில் சொகுசு பங்களா கார் என நீண்ட நாட்களாக சொகுசு வாழ்க்கை நடத்தி வந்துள்ளதும் தெரிய வந்தது. கைதான சஜித்திடம் இருந்து ஆன்லைன் லாட்டரிக்கு பயன்படுத்திய 5 செல்போன்கள், கார், ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆன்லைன் லாட்டரி கும்பல் கோவையில் பிடிபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.