சுரங்க பாதை தடுப்புக் கம்பியில் சிக்கி நின்ற லாரி..

கோவை: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 23). டிரைவர். இவர் நேற்று இரவு சரக்கு வேனில் கோவை காந்தி பார்க்கில் இருந்து டிராக்டர் உதிரி பாகங்களை ஏற்றுக் கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு 11 மணி அளவில் திருச்சி சாலையில் செல்வதற்காக கோவை ரெயில் நிலையம் அருகே லங்கா கார்னர் ரெயில்வே சுரங்க பாதையின் அடியில் செல்ல முயன்றார். அப்போது சரக்கு வேன் உயரம் அதிக அளவு இருந்ததால் சுரங்க பாதையின் முன்பு வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரும்பு தடுப்பானது சரக்கு வாகனத்தின் முன் பகுதியில் விழுந்தது. இதனால் முன் பகுதி முழுவதும் சேதமடைந்தது. டிரைவர் பாண்டியன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு கோவை ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இரும்பு தடுப்பில் சரியாக கான்கிரீட் போட்டு வைக்காததால் இரும்பு தடுப்பு வேன்மீது விழுந்து விபத்து நடந்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.