சோமனுார் : கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி, 52 நாட்களாக நடந்து வந்த விசைத்தறி வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்றிலிருந்து விசைத்தறிகள் மீண்டும் இயங்கத் தொடங்கின.
கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூட்டு கமிட்டி சார்பில், புதிய கூலி உயர்வை அமல்படுத்தக் கோரி, கடந்த, ஜன., 9ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்து வந்தனர்.இதனால், இரு மாவட்டங்களில் உள்ள, 2 லட்சம் விசைத்தறிகள் முடங்கின. உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன.
இதையடுத்து, உண்ணாவிரதம், கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். இடையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்ததால், முடிவு எட்டப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே, பல்லடம் சங்கத்தினர் திருப்பூரில் அமைச்சர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், அவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு, விசைத்தறிகளை இயக்கத்துவக்கினர்.
எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தில், கையொப்பம் இட்டால் மட்டுமே ஏற்போம், எனக்கூறி சோமனுார், அவிநாசி, தெக்கலுார் பகுதி விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்தனர். இந்நிலையில், கடந்த இரு நாட்களாக கோவை கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், சோமனுார் ரகத்துக்கு, 19 சதவீதமும், மற்ற ரகத்துக்கு, 15 சதவீதமும் கூலி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, 52 நாட்களாக தொடர்ந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதனால், அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நேற்று காலை முதல் அனைத்து பகுதிகளிலும் விசைத்தறிகள் இயங்கத் துவங்கின. சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த தொழிலாளர்கள் சோமனுார் திரும்பி வருகின்றனர்.
விசைத்தறி சங்க செயற்குழு கூட்டம், தலைவர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. அதில், விசைத்தறியாளர்கள் தாங்கள் பாவு நூல் எடுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் ஒப்பந்தம் செய்து அதன் நகல்களை தலைமை சங்கத்தில் ஒப்படைப்பது; வேலைநிறுத்தத்துக்கு, ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Leave a Reply