டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்கலாம்-சட்ட திருத்தம் கொண்டு வந்த தமிழக அரசு.!!

சென்னை: டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் என்பதற்கான சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

டாஸ்மாக் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது அதனை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கக்கூடிய வகையிலேயே அதன் சட்டவிதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்திருக்கிறது. மக்கள் தெரிவிக்கும் ஆட்சேபங்களை பரிசீலித்து உத்தரவுகளை பிறப்பிக்காமல் எந்த டாஸ்மாக் கடைகளும் திறக்க அனுமதிக்ககூடாது என புதிய டாஸ்மாக் கடைகள் திறப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

மேலும் மாவட்ட ஆட்சியர்கள் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மது விலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும் சட்டத்திருத்தம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக டாஸ்மாக் கடைகள் குடியிருப்பு பகுதியில் திறக்கும் போது எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்துகின்றனர். கடையை மூட வலியுறுத்துகிறார்கள்.

இந்நிலையில் மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை முழுமையாக பரிசீலித்து அதன் அடிப்படையிலேயே டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்பதற்கான திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்து தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்றால் மக்களே தடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.