மனைவியை குத்திக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
கோவை மதுக்கரையை சேர்ந்தவர் கனகராஜ் ( 29). தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கனகராஜ் சரியாக வேலைக்கு செல்வதில்லை. நந்தினி கோவைப்புதூர் அறிவொளி நகர் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் தண்ணீர் சுத்திகரிக்கும் மையத்தில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார். கனகராஜ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்தார். மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அடித்து உதைத்து கொடுமைப்படுத்தினார். இதனால் குழந்தைகளுடன் கோவைப்புதூர் எம்.ஜி.ஆர். நகரில் வந்து நந்தினி குடியேறினார். கடந்த 31.5.2019 அன்று கல்லூரிக்கு நந்தினி வேலைக்கு சென்றபோது, பின்தொடர்ந்து சென்ற கனகராஜ் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். உடலில் பல பாகங்களிலும் கத்திகுத்துபட்ட நந்தினி ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து கனகராஜை மடக்கிப்பிடித்து மதுக்கரை போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். நந்தினியை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால்செல்லும் வழியிலேயே நந்தினி பரிதாபமாக இறந்தார்.இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. ஆயுள் தண்டனை வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி நந்தினிதேவி, குற்றம் சாட்டப்பட்ட கனகராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். தண்டனை விதிக்கப்பட்ட கனகராஜ் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
Leave a Reply