விடாது துரத்தும்… 5 நாட்களில் 13,000 பேர் பலி.. சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா..

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கடந்த 13 மற்றும் 19 ஆகிய தேதிகளுக்கு இடையில் 5 நாட்களில் மட்டும் சுமார் 13 ஆயிரம் பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த இறப்பு குறித்து சீனா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாத நிலையில், பிரிட்டனை சேர்ந்த சுகாதார பகுப்பாய்வு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உலகம் முழுவதும் இந்த பாதிப்பு தீவிரமாக பரவியது. தற்போது வரை ஏறத்தாழ 70 கோடி பேரை இது பாதித்திருக்கிறது. அதேபோல 67 லட்சத்திற்கும் அதிகமானோரை பலி வாங்கியுள்ளது. இந்த பாதிப்புக்கு சீனாதான் காரணம் என்றும், சீனா திட்டமிட்டு இந்த வைரஸை பரப்பியது எனவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டின.

இதனையடுத்து சீனா விழித்துக்கொண்டது. உலகம் முழுவதும் பல நாடுகள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்வோம் என்று கூற தொடங்கிய நிலையில், சீனா மட்டும் ‘ஜீரோ கோவிட் தொற்று’ என கட்டுப்பாடுகளை தீவிரமாக்கியது. இந்தியாவிலும், அமெரிக்காவிலும், பிரேசிலிலும் கொரோனா உயிரிழப்புகள் லட்சக்கணக்கில் பதிவான நிலையில் சீனாவில் இந்த எண்ணிக்கை சில நூறுகளில் மட்டுமே பதிவானது. காரணம் இந்த கடுமையான கட்டுப்பாடுகள்தான்.

குடியிருப்பு பகுதியில் யாருக்கேனும் ஒருவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால் கூட அந்த ஒட்டுமொத்த குடியிருப்பும் சுற்றி வளைத்து சீல் வைக்கப்படும். பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்து சோதனை செய்வார்கள். இதில் யாருக்கேனும் தொற்று பாதிப்பு அறிகுறி இருந்தால் கூட அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த பகுதியில் ஒரு வாரத்திற்கு ஓட்டல்கள் தவிர எந்த கடைகளும் திறந்திருக்காது. இப்படியான கட்டுப்பாடுகள் நல்ல பலனை கொடுத்தாலும், சமானிய மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே மக்கள் பொறுத்து பார்த்து ஆத்திரமடைந்து போராட்டத்தில் குதித்தனர்.

இந்த போராட்டம் அரசுக்கு எதிராக திரும்பியது. இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் ‘ஜீரோ கோவிட் தொற்று’ கொள்கையை சீன அரசு கைவிட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தாலும் அந்த மகிழ்ச்சி ஒரு சில நாட்கள் மட்டுமே நீடித்தது. ஏனெினல் கொரோனா வைரஸ் இந்நாட்டு மக்கள் மத்தியில் தீவிரமாக பரவ தொடங்கிவிட்டது. கட்டுப்பாடுகள் நீக்கி ஒரு வாரத்தில் மருந்தகங்களில் உள்ள சளி காய்ச்சலுக்கான மருந்துகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. அடுத்த வாரங்களில் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதற்கடுத்த இரண்டு வரங்களில் சுடுகாடுகளில் கூட்டம் பிணங்கள் வழிந்தன.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 60,000 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்தது. ஆனால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 13 மற்றும் 19 ஆகிய தேதிகளுக்கு இடையில் 5 நாட்களில் மட்டும் 681 பேர் கொரோனா தொற்றாலும், 11,977 பேர் இதர நோய்களாலும் உயிரிழந்துள்ளதாக சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை மீது சந்தேகம் எழுப்பியுள்ள பிரிட்டனை சேர்ந்த சுகாதார பகுப்பாய்வு நிறுவனமான ‘ஏர்ஃபினிட்டி’, இந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 13 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்று கூறியுள்ளது.

மேலும் நேற்று ‘சந்திர புத்தாண்டு’ சீனாவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், நாடு முழுவதும் சுமார் 20 கோடிக்கும் அதிகமானோர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என்பதால் எனவே இனி வரும் நாட்களில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று ஏர்ஃபினிட்டி எச்சரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.