ஆன்லைன் விசாரணையின்போது பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட வக்கீலுக்கு சிறை, ரூ.6,000 அபராதம்- ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு.!!

சென்னை: ஆன்லைன் விசாரணையின்போது பெண்ணிடம் ஆபாசமாக நடந்துகொண்ட வழக்கறிஞருக்கு 2 வாரங்கள் சிறை தண்டனை, ரூ.6,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக வழக்கு விசாரணை நடைபெற்ற போது நீதிபதி ஒருவர் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் தன்னுடைய கேமரா ஆனில் இருந்தது தெரியாமல் வழக்கறிஞர் ஒருவர் தன்னுடன் இருந்த பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி இருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்த நீதிபதி பிரகாஷ் தலைமையிலான அமர்வு, சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை, வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்தது. அதுமட்டுமின்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் நீதிபதி பிரகாஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் விசாரணையின்போது பெண்ணிடம் ஆபாசமாக நடந்துகொண்ட வழக்கறிஞருக்கு 2 வாரம் சிறை தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். ஏற்கனவே 34 நாட்கள் வழக்கறிஞர் சிறையில் இருந்ததால் தண்டனையை கழிக்க உத்தரவிடப்பட்டது. வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்த சி.பி.சி.ஐ.டி.க்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.