காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் ஏரிகள் நிறைந்த மாவட்டங்களாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பாலாற்றில் மையமாக வைத்து ஏராளமான ஏரிகள் இந்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ளன. பாலாறு படுக்கைக்கு கீழ் வரும் ஏரிகள் காரணமாக, அதிக அளவு விவசாயமும் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் நிரம்பும் ஏரிகளை நம்பி , காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சார்ந்த பெரும்பாலும் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். அதேபோல காஞ்சிபுரம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த குடிநீர் ஆதாரமாகவும் சில ஏரிகள் இருந்து வருகின்றன.
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி, தென்னேரி, உத்திரமேரூர் ஏரி, ஸ்ரீபெரும்புதூர் ஏரி, எடமிச்சிஏரி, தாமல் ஏரி ஆகியவை உள்ளன.
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் தொடங்கியது. எதிர்பார்த்ததை விட தமிழகத்தில் நல்ல மழை பெய்தது. இந்தியாவில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற இரு பருவ காலங்கள் மூலமாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழைதான் அதிக அளவில் கைகொடுக்கும். வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதங்கள் வரையில் நீடிக்கும். அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டு மேலாக அவ்வப்பொழுது மழை பெய்து, வந்ததால் ஏரிகள் முழுமையாக வற்றாமல் இருந்து வந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 31 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
காஞ்சிபுரம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் சுமார் 1022 ஏரிகள் உள்ளன. அவற்றில் 57 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த24 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 7 ஏரி, சென்னையை மாவட்டத்தை சேர்ந்த 1 ஏரி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த25 ஏரிகள் ஆகியவை முழு (100 சதவீத கொள்ளளவு) கொள்ளளவை எட்டியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24 ஏரிகள் , செங்கல்பட்டு மாவட்டத்தில் 13 ஏரிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 ஏரிகள், சுமார் 76% சதவீதத்திலிருந்து 99% சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90 ஏரிகள் ,செங்கல்பட்டு மாவட்டத்தில் 53 ஏரிகள், சென்னையில் 8 ஏரிகள், திருவண்ணாமலையில் 27 ஏரிகள், சுமார் 51 சதவீதத்திலிருந்து 75 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 192 ஏரிகள் ,செங்கல்பட்டு மாவட்டத்தில் 134 ஏரிகள், சென்னையில் 7 ஏரிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 ஏரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் 1 ஏரி ,26%- 50% கொள்ளளவை எட்டியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 52 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 321 ஏரிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஏரி, திருவள்ளூர் மாவட்டத்தில் 3 ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் நீர் உள்ளது. தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருவதால், கால்வாய்களில் நீர் வரத்து அதிகரிக்க துவங்கியிருப்பதால், விரைவாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்னும் பல ஏரிகள் நிரம்பும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.