தமிழ்நாடு பாஜக தலைவராக செயல்பட்டுவந்த எல். முருகன், பின்னர் மத்திய தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், தற்போது அவர் தனது மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், 2029 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கட்சிப் பணியில் ஈடுபட விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் எல். முருகனின் பதவிக் காலம் 2030 வரை இருக்கும் நிலையில், அந்தப் பதவியில் இருந்தும் தன்னை விடுவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தனது ராஜினாமா குறித்து பிரதமர் மோடிக்கு ஐந்து பக்க கடிதத்தை எல். முருகன் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது; “தமிழ்நாட்டிற்கு நீங்கள் மேற்கொண்ட சமீபத்திய பயணம் என் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் சென்ற ஒவ்வொரு இடத்திலும், மக்கள் உங்களை வரவேற்ற விதத்திலும், உங்கள் வருகை அவர்கள் மத்தியில் ஏற்படுத்திய நம்பிக்கையிலும் அந்த அன்பை நான் நேரில் கண்டேன். தமிழ்நாட்டிற்காக நீங்கள் உழைத்து வரும் ஒளிமயமான எதிர்காலத்தின் மீதான அவர்களின் மனமார்ந்த நம்பிக்கையை அவர்களின் உற்சாகம் வெளிப்படுத்தியது. நமது மாநிலத்தின் மீதான உங்கள் அர்ப்பணிப்பையும், மக்கள் உங்கள் மீது கொண்டுள்ள அன்பையும் காணும்போது நான் பெருமையும் நன்றியுணர்வும் கொண்டேன்; அத்துடன் தமிழ்நாடு, நமது கட்சி மற்றும் நமது தேசத்திற்காக இன்னும் அதிகமாகச் செயல்பட வேண்டும் என்ற எனது உறுதியை அது மேலும் வலுப்படுத்தியது.
உங்கள் தலைமையின் கீழ் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பணியாற்றியது என் வாழ்நாளின் மிகப்பெரிய பெருமை. நான் அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல; மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். தினக்கூலித் தொழிலாளர்களாகவும் கால்நடை மேய்ப்பவர்களாகவும் பணியாற்றிய என் பெற்றோர், இன்றும் கோனூர் கிராமத்தில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். தங்கள் மகன் ஒரு நாள் மத்திய அரசில் பணியாற்றுவான் என்று அவர்கள் ஒருபோதும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ள அவர், தொடர்ந்து பாஜகவில் தொண்டராக இணைந்தது, தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவர், இரண்டு முறை மாநிலங்களவைத் தலைவர், மத்திய இணை அமைச்சர் என அனைத்தையும் நினைவுகூர்ந்துள்ளார்.தொடர்ந்து எல். முருகன் தனது கடிதத்தில், “தங்களின் சமீபத்திய வருகையின்போது நான் கண்ட அன்பும் நம்பிக்கையும், தமிழ்நாட்டில் நாம் இன்னும் பல சாதனைகளைப் படைக்க முடியும் என்ற என் உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளன. 2029 மக்களவைத் தேர்தலுக்காகக் கட்சியைத் தயார்படுத்துவதிலும், இம்முறை தமிழ்நாட்டிலிருந்து பெருவாரியான இடங்களை வென்று தந்து, தங்களின் தலைமையிலான ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கான பணிகளிலும் எனது முழு நேரத்தையும் ஆற்றலையும் அர்ப்பணிக்க விரும்புகிறேன்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தங்களின் அரசில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றமைக்கு ஆழ்ந்த நன்றியுடன் இக்கோரிக்கையை முன்வைக்கிறேன். தினக்கூலித் தொழிலாளர்களின் மகனான என் மீது தாங்கள் வைத்த நம்பிக்கை, என் வாழ்வின் ஆகப்பெரிய பெருமையாகத் திகழும். மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடையே அயராது பணியாற்றுவதன் மூலம் அந்த நம்பிக்கைக்கு ஈடுசெய்யத் தங்களின் ஆசியை வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.









