சவீதா மருத்துவ கல்லூரி மீது தொடர் புகார்கள்

அதிக கட்டணம் வசூலித்தது தொடர்பாக சவீதா மருத்துவக் கல்லூரி மீது வந்த புகார்களை தொடர்ந்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் விசாரணை நடத்தியுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தங்கள் மாணவர்களிடம் இருந்து 4 ஆண்டுகள் 6 மாதம் வரையிலான காலக்கட்டத்திற்கு மட்டுமே எம்பிபிஎஸ் படிப்பிற்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்து இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் உள்ள சில மருத்துவக் கல்லூரிகள் 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து கட்டணம் வசூல் செய்வதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதுபோல தனியார் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்து கட்டண நிர்ணயக் குழு எச்சரித்தது. சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் தங்களின் விடுதி கட்டணம், போக்குவரத்து கட்டணம், உணவு கட்டணம் ஆகியவற்றை இணையதளத்தில் வெளியிட வேண்டும். விடுதி மற்றும் பேருந்து வசதிகள் மாணவர்களின் விருப்பத்திற்குரியவை, அவற்றை கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது, புகார்களை விசாரிக்க பிரத்யேக குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. கட்டாயக் கட்டணம், விடுதிக் கட்டணம் மற்றும் சான்றிதழ்களை முடக்குதல் போன்ற சட்டவிரோத செயல்களுக்கு எதிராக மாணவர்கள் புகாரளிக்கலாம்.

கல்லூரிகளில் கட்டணக் கொள்ளையால் பாதிக்கப்பட்டிருந்தால், உரிய ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அதிக கட்டணம் வசூலித்ததாக சவீதா மருத்துவக் கல்லூரி மீது எழுந்த புகார்களை தொடர்ந்து விசாரணை நடைபெற்றுள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் அமைத்த குழு மூலம் நேற்று இந்த விசாரணை நடைபெற்று இருக்கிறது. விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களை தமிழ்நாடு அரசிடம் விசாரணைக்குழு நேற்று சமர்ப்பித்துள்ளது. அதிக கட்டணம் வசூலித்தது தொடர்பான இந்த விசாரணையில் சவீதா மருத்துவக் கல்லூரியின் மீது தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.