திருச்சியில்ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவில் ஊழியர்கள் மோதல்….

108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையான தலம் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளை உடைய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்தக் கோயிலில் நடைபெறும் முக்கிய உற்சவமான வைகுண்ட ஏகாதசி பெருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் விஸ்வரூப தரிசனத்துக்கு பிறகு பெருமாளை வழிபட வரிசையில் காத்திருந்தனர். விஸ்வரூப தரிசனத்துக்கு பிறகு காலை 7 மணியளவில் முதல் பக்தர்கள் சேவைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே, சேவைக்காக மூலஸ்தானத்துக்கு முன்புறம் உள்ள காயத்ரி மண்டபத்தில் நீண்ட நேரமாக காத்திருந்த ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்கள் தங்களை விரைந்து சேவைக்கு அனுமதிக்கும்படி அங்கிருந்த உண்டியலைத் தட்டி கோஷமிட்டுள்ளனர். இதை அங்கு காவல் பணியில் இருந்த கோயில் பாதுகாவலர்கள் தட்டிக் கேட்டபோது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆந்திர ஐயப்ப பக்தர் சென்னா ராவ் என்பவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அவர் காயத்ரி மண்டபத்திலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
காவல் நிலையத்தில் புகார்: தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரிடம் பேசி வெளியே அழைத்து வந்தனர். இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக கோயில் பாதுகாவலர்கள் 3 பேர் மீது சென்னா ராவ் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பாதுகாவலர்கள் பரத், செல்வகுமார், விக்னேஷ் ஆகியோர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோயில் உள்ளே நடந்த சம்பவம் தொடர்பாக போலீஸார், மூவரிடமும் தகவல் பெற்றுள்ளனர்.
ஸ்ரீரங்கம் கோயில் மூலஸ்தானம் அருகே ரத்தம் சிந்தியதால், மூலவர் ரங்கநாதர் சன்னதியின் நடை சாத்தப்பட்டு, அந்த இடத்தை சுத்தப்படுத்தி, பரிகார பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் ஒரு மணிநேரத்துக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. ரங்கநாதர் கோயிலில் சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்கிய முதல் நாளிலேயே ஏற்பட்டுள்ள இந்த மோதல் சம்பவம் பக்தர்கள், கோயில் நிர்வாகத்தினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வைகுண்ட ஏகாதசி பெருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை மாலை, காவல் உதவி மையத்தை மாநகர காவல் ஆணையர் என்.காமினி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நேரம் வரிசையில் பக்தர்கள் காத்திருந்தபோது, அவர்களை நிறுத்தி விட்டு, சில விஐபிக்களை கோயில் ஊழியர்கள் தரிசனத்துக்காக அழைத்துச் சென்றதாகவும், இதனால், ஆத்திரமடைந்த ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்கள் கோஷமிட்டதைத் தொடர்ந்து இந்த கைகலப்பு சம்பவம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை கோயில் நிர்வாகம் மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கிடைத்த தகவல் படி கோவில் ஊழியர்கள் மூன்று பேரையும் ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.