ராமேஸ்வரத்தில் பயங்கர ஆயுதங்களுடன் கடத்தல் கும்பல்..? 160 கிலோ கஞ்சாவுடன் சொகுசு கார் பறிமுதல்..!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயில் கார் பார்க்கிங் வளாகத்திற்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் வெள்ளை நிற காரில் வந்துள்ளனர்.

காரை நிறுத்திவிட்டு சென்றவர்கள் திரும்பி வரவில்லை. அக்காரில் பயங்கர ஆயுதங்களுடன் கடத்தல் கும்பல் வந்திருக்கலாம். இவர்கள் ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்றும் தகவல் பரவியது. இதையடுத்து மத்திய புலனாய்வு துறை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜார்கண்ட் மாநில பதிவு எண்ணுடன் இருந்த காரின் உரிமையாளர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது.

சந்தேகமடைந்த போலீசார் நேற்று மாலை காரினை மண்டபம் காவல் நிலையத்திற்கு கிரேன் மீட்பு வாகனம் மூலம் கொண்டு சென்றனர். பின் பாதுகாப்புடன் காரின் கதவுகளை உடைத்து பார்த்தபோது காரினுள் 79 பார்சல்களில் 160 கிலோ கஞ்சா இருந்தது. இந்த கஞ்சா பொட்டலங்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. காரில் வந்த கும்பல் எங்கு பதுங்கியுள்ளனர் என்பது குறித்து ராமேஸ்வரம் தீவுப்பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் சோதனையிட்டு வருகின்றனர்.