உச்ச தலைவரை அடக்கம் செய்யக் கூட நேரமில்லாமல் பல வாரங்களாக பெட்டியில் இருக்கும் காமேனி சடலம்…

ரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டு பல வாரங்கள் கடந்த நிலையிலும், அவரது உடல் இன்னும் அடக்கம் செய்யப்படாமல் இருப்பது சர்வதேச அளவில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

பாதுகாப்பு காரணங்கள் மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல் அச்சம் காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

86 வயதான அயதுல்லா அலி காமேனி, கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். ஈரானின் மிக உயரிய அதிகார மையமாகத் திகழ்ந்த அவரது மரணம் அந்த நாட்டுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, காமேனியின் இறுதிச்சடங்கை நடத்துவதில் ஈரான் அரசு கடும் தயக்கம் காட்டி வருகிறது. இதற்கு முக்கியமாக மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இறுதிச்சடங்கின்போது லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தைக் குறிவைத்து இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என ஈரான் அஞ்சுகிறது. காமேனியின் மரணத்திற்குப் பிறகு நாட்டில் நிலவும் அசாதாரண சூழலில், பெரிய அளவிலான மக்கள் கூடும்போது அது அரசுக்கு எதிரான போராட்டமாக மாற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. ஈரான் அரசு தற்போது மிகவும் பலவீனமாகவும், அச்சத்திலும் உள்ளது. எந்தவொரு சிறிய ரிஸ்க்கையும் எடுக்க அவர்கள் தயாராக இல்லைஎன பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மார்ச் 4-ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு அரசு முறைப்படி இறுதிச்சடங்கு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடைந்ததால் அந்தத் திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. 1989-ல் ஈரானின் முந்தைய தலைவர் ருஹோல்லா கொமேனி இறந்தபோது லட்சக்கணக்கான மக்கள் திரண்டு பிரம்மாண்ட இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. ஆனால், காமேனி விஷயத்தில் அத்தகைய சூழல் இதுவரை அமையவில்லை.

தற்போது டெஹ்ரானை விடப் பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் ‘மஷாக்’ (Mashhad) நகரில் காமேனியின் உடலை அடக்கம் செய்ய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இருப்பினும், இதுவரை இதற்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படவில்லை. காமேனியின் உடல் எங்கே வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களும் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும் உச்ச தலைவர் கொல்லப்பட்டும், அவருக்கு இன்னும் இறுதி அஞ்சலி கூட செலுத்த முடியாத நிலையில் ஈரான் அரசு இருப்பது அந்த நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.