அபுஜா: இந்தியாவில் கருப்பு பணம், ஊழலை ஒழிப்பதாக கூறி 500, 1000 ரூபாய் நோட்டுகள் கடந்த 2016ல் மதிப்பிழப்பு செய்யப்பட்டன.
இதேபாணியில் தற்போது நைஜீரியாவில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நிலையில் அந்தநாட்டு மக்கள் வங்கி, ஏடிஎம் மையங்களை சூறையாடி, தீவைத்து வருகின்றனர். வரும் 25ம் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்கள் போராட்டம் என்பது அந்த நாட்டில் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016 நவம்பர் மாதம் 8 ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. கருப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டன. மாறாக புதிதாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு நடைமுறையில் உள்ளன. மேலும் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது நாடு முழுவதும் ஏராளமான மக்கள் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் காத்திருந்தனர். இந்த வேளையில் சிலர் இறந்தனர்.
இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டதை எதிர்க்கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர். முறையான திட்டமிடலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்படவில்லை. இதனால் ஏழை, எளிய மக்கள் அதிகமாக சிரமப்படுகின்றனர் என விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தான் இந்தியாவை போல் ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவிலும் ஊழலை ஒழிப்பதாக கூறி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி நைஜீரியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள 200, 500 மற்றும் 1,000 நைரா நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்படுகின்றன. இதுபற்றிய அறிவிப்பு கடந்த 2022ல் நடைமுறைக்கு வந்தது. நைஜீரியா அதிபர் முகமது புகாரி இதுபற்றி கூறுகையில், ”பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறுகிய காலம் சிரமத்தை ஏற்படுத்தும். அதன்பிறகு நீண்டகாலத்துக்கு நல்ல பலன்களை அளிக்கும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாறும்போது ஊழல் ஒழிக்கப்படும்” என்றார்.
இந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்ற 2023 ஜனவரி 31 வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் ஏராளமான மக்கள் பணத்தை குறித்த தேதிக்குள் மாற்றவில்லை. இதனால் இந்த காலஅவகாசம் பிப்ரவரி 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் கூட வங்கி மற்றும் ஏடிஎம் இயந்திரங்களில் புதிய நோட்டுகள் தேவையான அளவுக்கு புழக்கத்துக்கு வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் அங்கு நடைமுறையில் உள்ள பல கட்டுப்பாடுகளால் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் மக்கள் தவிக்க தொடங்கினர்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தற்போது வீதிகளில் இறங்கி போராட்டத்தை துவங்கி உள்ளனர். அரசு அலுவலகங்கள், வங்கிகள், பிரதான சாலைகள் ஆகியவற்றில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வங்கி, ஏடிஎம் மையங்களை தாக்கி தீவைக்க தொடங்கி உள்ளனர். நைஜீரியா நாட்டின் அதிபர் தேர்தல் பிப்ரவரி 25ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தற்போது போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் அங்கு அதிபர் தேர்தல் அமைதியாக நடக்குமா? இல்லையா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
Leave a Reply