பழனி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா! நவம்பர் 24-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் படிப்பாதை தற்காலிகமாக அடைக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது படை வீடாகத் திகழ்வது பழனி. தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மலை அமைந்துள்ளது. இந்த தலத்தில் முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார். இவரை பழனியாண்டவர் என்றும் அழைக்கிறார்கள்.
இத்தலத்தின் மிகப்பிரசிட்டமான பிரசாதம் ‘பஞ்சாமிர்தம்’ ஆகும். பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோவிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா ,தைப்பூசம், பங்குனி உத்திரம் பிரசித்தி பெற்ற விழாக்கள் ஆகும்.
இந்த நிலையில், இந்த மாதாம் வரவிருக்கும் முக்கிய் நிகழ்வான கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வரும் 24.11.2026 செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு மலைக்கோயிலில் விஸ்வரூப தரிசனமும், மாலை 4 மணிக்கு பூஜையும் நடைபெற்று, மாலை 6 மணியளவில் மலைக்கோயிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு பக்தர்களின் வருகை மற்றும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக அன்று பிற்பகல் 2 மணியளவில் மலைக்கோவிலுக்குச் செல்லும் படிப்பாதை தற்காலிகமாக அடைக்கப்படும். பின்னர் கூட்ட நெரிசல் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப, மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். எனவே, திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.








