கடலூரில் பறவை காய்ச்சல் எதிரொலி – நாமக்கல் முட்டைக்கு தடை!

கடலூரில் பறவை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக நாமக்கல் முட்டைக்கு ஓமன் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால், நாமக்கல்லில் 5 கோடி முட்டைகள் வரையிலும் தேக்கமடைந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 8 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகிறது. தினமும் சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகம், கேரளா மற்றும் தமிழக அரசின் சத்துணவு திட்டம் மற்றும் வெளிநாடுகளுக்கு நாமக்கல்லில் இருந்து முட்டைகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தியாவில் இருந்து ஓமன், துபாய், மஸ்கட் உள்ளிட்ட நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஓமன் அரசு, தனது நாட்டு தேவைக்கு 50 சதவீத முட்டைகளை நாமக்கல்லில் இருந்து இறக்குமதி செய்கிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம், கோழிகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள பண்ணைகளில் இறந்த கோழிகள் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்பட்டன.

தமிழகத்தில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதால், இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய, ஓமன் அரசாங்கம் தற்போது தடை விதித்துள்ளது. இதனால், நாமக்கல் மண்டலத்தில் சுமார் 5 கோடி முட்டைகள் வரை தேக்கமடைந்துள்ளது. முட்டை தேக்கத்தை தடுக்க பண்ணையாளர்கள் விலை குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து, நாமக்கல் கால்நடை மண்டல விவசாய பண்ணையாளர்கள், வர்த்தகர்கள் சங்க தலைவர் டாக்டர் செந்தில் கூறுகையில், `நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில், முழுமையான பயோ செக்யூரிட்டி முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. எனவே, இங்குள்ள கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் பரவ வாய்ப்பில்லை. கோழிப்பண்ணை தொழிலை பாதுகாக்கும் வகையில், ஒன்றிய-மாநில அரசுகள், நாமக்கல் மண்டலத்தை தனி முட்டை ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம், மாநிலத்தின் வேறு பகுதிகள் மற்றும் இந்தியாவின் வேறு பகுதியில் நோய் தாக்கம் ஏற்பட்டாலும், நாமக்கல்லில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி பாதிக்கப்படாமல் இருக்கும்,’ என்றார்.

ஓமன் அரசு, தனது நாட்டு தேவைக்கு 50 சதவீத முட்டைகளை நாமக்கல்லில் இருந்து இறக்குமதி செய்கிறது முட்டை விலை தொடர் சரிவு சபரிமலை சீசன் தொடங்கியதால், முட்டை விலை குறைய தொடங்கியது. தற்போது, கடலூரில் பறவை காய்ச்சல் பீதியால், ஓமன் நாட்டுக்கு முட்டை ஏற்றுமதி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், முட்டை விலையில் மேலும் 20 காசுகள் நேற்று என்இசிசி குறைத்தது. இதையடுத்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 560 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 10 நாளில் முட்டை விலையில் 60 காசுகள் வரை குறைந்துள்ளது. அதேபோல், ஒரு கிலோ கறிக்கோழியின் பண்ணை கொள்முதல் விலை ரூ.100ல் இருந்து ரூ.95 ஆக நேற்று குறைந்துள்ளது.